×

ஆட்டோ டிரைவர், தொழிலாளி கொடூரமாக வெட்டி படுகொலை; ஆவடி மைதானத்தில் நள்ளிரவு பயங்கரம்

ஆவடி: ஆவடியின் மைய பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மைதானத்தில் நள்ளிரவில் ஆட்டோ டிரைவர், கூலி தொழிலாளி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆவடி வசந்தம் நகர் சிவகுரு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (29). இவர் ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி பிரியா. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆவடி நேரு பஜாரில் உள்ள மசூதி பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன் (30). இவர் மீன் கடை ஊழியர். இவரின் மனைவி கவுஸ்பி. இவர் நிறைமாத கர்ப்பமாக உள்ளார். நெருங்கிய நண்பர்களான சுந்தரும் அசாருதீனும் வேலையை தவிர மற்ற இடங்களுக்கு ஒன்றாகத்தான் செல்வார்களாம்.

இருவரும் வழக்கமாக இரவு 10 மணிக்கெல்லாம் வீடு திரும்பிவிடுவார்களாம். ஆனால் நேற்றிரவு 10 மணிக்கு பிறகும் இரண்டு பேரும் தங்களது வீடுகளுக்கு வரவில்லை. இதனால் இருவரின் மனைவியும் செல்போனில் தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. பதற்றம் அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். மேலும் இரண்டு வீட்டாரின் குடும்பத்தினரும் தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில், ஆவடியின் மையபகுதியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஓசிஎப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவல்படி உறவினர்கள் விரைந்தனர். அங்கு சுந்தர், அசாருதீன் ஆகியோர் தலை, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றி நள்ளிரவு 12 மணி அளவில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆவடி துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இரண்டுபேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நேற்றிரவு ஓசிஎப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன், அவர்களது நண்பர்கள் ஜெகன் (29), யாசின் (25) ஆகியோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. திடீரென அவர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறு நடந்துள்ளது. இதனால் சுந்தர், அசாருதீன் ஆகியோரை வெட்டிக்கொல்லப்பட்டிருக்கலாம். வேறு ஏதாவது முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆவடி மையப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான மைதானத்தில் 2 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Awadi Ground , Auto driver, worker brutally hacked to death; Midnight terror at Avadi ground
× RELATED ஆட்டோ டிரைவர், தொழிலாளி கொடூரமாக...