பாஜக ஊர்வலத்தில் பிஜூ ஜனதா தளத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் கார் மோதியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம்

ஒடிசா: ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வின் கார் பாஜக ஊர்வலத்தில் புகுந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒடிசாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வரும் 24-ஆம் தேதியுடன் தேர்தல் நிறைவடையும் நிலையில் பாணாப்பூரில் பாஜகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பிஜூ ஜனதா தள கட்சியின் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ பிரசாந்த் ஜெக்தேவ் அவ்வழியே காரில் வந்தார். போலீசாரும் பாஜக தொண்டர்கள் சிலரும் அந்த காரை தடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கூட்டத்தை நோக்கி காரை வேகமாக முட்டியதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். கார் மோதியதால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் காரை ஓட்டிய பிரசாந்த் ஜெக்தேவ் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் கொட்டிய நிலையில் போலீசார் அவரை மீட்டு அழைத்து சென்றனர். கார் மோதியதில் போலீசார் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரசாந்த் ஜெக்தேவ் மது போதையில் இருந்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக தலைவர் ஒருவரை தாக்கியதாக பிரசாந்த் ஜெக்தேவ் கடந்த செப்டம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: