கொரோனா தொற்றுக்குப்பிறகு முதன்முறையாக தமிழகம் முழுவதும் லோக் அதாலத்: 76,599 வழக்குகளில் தீர்வு; ரூ.335 கோடி பைசல்

சென்னை: கொரோனா தொற்றுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 76,599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.335 கோடி பைசல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்  அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது சனிக்கிழமைகளில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் லோக்  அதாலத் நடந்தது.

செக் மோசடி வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மின் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு கட்டணம் தொடர்பான வழக்குகள், தீர்வுக்கு வரக்கூடிய ஜீவனாம்ச வழக்குகள், வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் என நேற்று 1,77,977 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தலா 4 அமர்வுகளும், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 411 அமர்வுகளும் என மொத்தம் 419 அமைக்கப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் தொடரப்படுவதற்கு முன்பான பிரச்னைகள் ஆகியவை இந்த லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டன. இந்த லோக் அதாலத்தில் 76,599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.334 கோடியே 91 லட்சத்து 11,545 பைசல் செய்யப்பட்டுள்ளது. 106 குடும்பநல வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. 20 தொழிலாளர் வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தகவலை தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: