×

4.50 லட்சம் மக்கள் உணவு, தண்ணீரின்றி தவிப்பு மரியுபோல் நகரத்தை அழிக்கும் ரஷ்யா: மசூதி மீது குண்டுவீசியதில் 86 பேர் பலி? கீவ்வை நோக்கி படைகள் முன்னேற்றம்

லிவிவ்: ரஷ்யா படைகளின் ஆக்ரோஷமான தாக்குதலால் மரியுபோல் நகரம் முற்றிலும் அழிந்து  வருகிறது. இங்குள்ள மசூதியின் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதில், அதில் புகலிடம் தேடியிருந்த 86 பேரின் கதி என்னவானது என்று தெரியவில்லை. இங்குள்ள 4.50 லட்சம் மக்கள் உணவு, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். நோட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வரும் போர் நேற்று 17வது நாளாக தொடர்ந்தது. கிழக்கு, தெற்கு உக்ரைன் வழியாக நுழைந்து தீவிர தாக்குதல்களை நடத்திய ரஷ்யா, தற்போது தலைவநகர் கீவ், 2வது பெரிய நகரமான கார்கவி, துறைமுகம் நகரமான மரியுபோல் ஆகியவற்றை பிடிக்க டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுடன் முன்னேறி வருகிறது.

இருப்பினும், உக்ரைன் வீரர்களின் கடுமையான பதிலடி மேற்கண்ட நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறாமல் இருக்கவும், அவர்கள் வான்வழி மூலம் தாக்குதல் நடத்தாமல் இருக்கவும் விமான நிலையங்களை ரஷ்யா அழித்து  வருகிறது. லுட்ஸ்க் நகர் மீதான நடத்தப்பட்ட தாக்குதலில் 4 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக வசிக்கும் இடங்கள் ஏவுகணை வீச்சு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் சேதமடைந்த கட்டிடங்கள், துப்பாக்கி மற்றும் குண்டு சத்தங்கள் கேட்பதால் மக்கள் வெளியே வர அஞ்சி பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

வான்வழி, பீரங்கி தாக்குதல்களால் துறைமுக நகரமான மரியுபோல் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. இங்கு சிக்கியுள்ள 4.5 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மின்சாரின்றி தவித்து வருகின்றனர். தொடர் தாக்குதல்கள் நடந்து வருவதால், அவர்களை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை வெளியேற்று முயற்சியில் உக்ரைன் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள உள்ள ஒரு மசூதி மீது ரஷ்ய ராணுவம் நேற்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதில் பதுங்கி இருந்த 86க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது வெளியாகவில்லை. இவர்களில் 36 பேர் குழந்தைகள், சிறுவர்கள். இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை.

மரியுபோல் மேயர் கூறுகையில், ‘மரியுபோலில் கடந்த 12 நாட்களில் நடந்த தாக்குதலில் 1,582 பேர் உயிரிழந்து உள்ளனர். பீரங்கி தாக்குதல்களில் பலியானவர்களை புதைக்க குழிவை தோண்டுவதை நிறுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்கள் கூட புதைக்கப்படுவதில்லை’ என்றார். மரியுபோல் நகரத்தை பெரும்பாலும் அழித்தாலும், தொடர்ந்து உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டிற்குள்தான் அந்த நகரம் உள்ளது. அதை கைப்பற்ற தீவிர தாக்குதலை நடத்திய வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ்வை நோக்கி டாங்கிகளுடன் முன்னேறி வருகிறது.

கீவ்வில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் ரஷ்ய படைகள் தடுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே, ரஷ்யா தங்களின் தாக்குதல்கள் முக்கிய நகரங்களில் தீவிரப்படுத்தி உள்ளதால் போர் மீண்டும் உக்கிரத்தை அடைந்துள்ளது. ரஷ்ய, உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சில சாதகமான  முன்னேற்றங்கள் இருப்பதாக புடின் கூறினார். ஆனால், அவர் எந்த விவரங்களையும்  தெரிவிக்கவில்லை. போர் காரணமாக இதுவரை 25 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* தொடரும் தடைகள்
ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் கடல் உணவுகள், மதுபானங்கள் மற்றும் வைரங்கள் அமெரிக்காவில் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.

* மிரட்டல் கடிதம்
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் டிமிட்ரி ரோகோசின், அமெரிக்காவின் நாசா மற்றும் சர்வதேச விண்வெளி கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்தாக முடியலாம். எனவே, தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று மிரட்டியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தை தரையில் மோதி அழித்து விடுவதாக ரஷ்யா ஏற்கனவே மிரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* 4வது பெரிய நகரத்துக்கு குறி
உக்ரைனின் தொழில், துறைமுகம் நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, முதல் முறையாக கிழக்கு உக்ரைனின் பெரிய தொழில்துறை மையமும்,  4வது பெரிய நகரமுமான டினிப்ரோ மீது வான் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இங்கு 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* மேயர் கடத்தல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோவில், ‘எங்கள் நிலத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு காப்பாற்ற முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் அதை செய்வோம் என்று கூற முடியும். போர் நடக்கும் பகுதியில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற, 12 மனிதநேய பாதைகளை அமைக்க, அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். உணவு, மருந்து மற்றும் பிற அடிப்படை தேவைகள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முயற்சித்து வருகிறோம். மெலிடோபோல் மேயரை ரஷ்யா கடத்தி உள்ளது. இது, ஐஎஸ் தீவிரவாதிகளின் செயலுக்கு சமமானது,’ என்று தெரிவித்தார்.

* செர்னோபில்லில் சீரமைப்பு பணி
உக்ரைன் மீது போர் தொடங்கியதும், செர்னோபில் அனுமின் நிலையம் மீது ரஷ்யா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில், மின்கம்பிகள் கடுமையாக சேதமடைந்தது. தற்போது, மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில், சேதமடைந்த மின் கம்பிகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சீரமைக்கும் பணியை சர்வதேச அணுமின் நிலைய அமைப்பு தொடங்கி உள்ளது.

* 810 ஏவுகணைகள் வீச்சு
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷ்ய ஒரு நாளைக்கு சராசரியாக 200 போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. ஆனால், அவற்றுக்கு பதிலடி கொடுக்க, 5 முதல் 10 போர் விமானங்களை மட்டுமே உக்ரைன் பயன்படுத்துகிறது. ரஷ்யா இதுவரையில் உக்ரைன் மீது 810 ஏவுகணைகளை ஏவியுள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் ரஷ்யப் படைகள் கொத்து வெடிகுண்டுகளையும், ‘வேக்யூம் வெடிகுண்டு’களையும் வீசுகிறது,’ என்றார்.

Tags : Russia ,Mariupol ,Kiev , 4.50 lakh people without food and water Russia destroys the city of Mariupol: 86 killed in the bombing of the mosque? Forces advancing towards Kiev
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...