×

ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தர முன்வர வேண்டும்: அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  30வது அனைத்திந்திய கட்டுநர் மாநாடு மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். ஒன்றிய - மாநில அரசுகளின் உட்கட்டமைப்பிற்கு அடித்தளம் போடக்கூடியவர்கள் நீங்கள். ஆம் - நீங்கள் எல்லாம் இந்த நாட்டை கட்டமைப்பதில் ஒன்றிய - மாநில அரசுகளுடன் கை கோர்த்துப் பயணிக்கிறீர்கள். அந்தப் பயணத்தினுடைய ஒரு அங்கமாகவே இந்த 30வது அகில இந்திய கட்டுநர்கள் மாநாட்டை அகில இந்திய கட்டுநர்கள் சங்கத்தின் தென்னக மையம் நடத்துகிறது.

சென்னை மையம் மட்டுமே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கும் மையமாக விளங்குகிறது என்று சென்னை மையத்தின் தலைவர் சாந்தகுமார் என்னிடத்தில் சொன்னார். ஒரு கட்டடத்திற்கு தூண் வலு சேர்க்கும் என்று சொல்வார்கள்.  நீங்கள் மாநில அரசின் கட்டடங்களை தரமாகக் கட்டுவதில் வலுசேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
 கொரோனா காலத்தில் எத்தகைய சவால்களை இந்த கட்டுமானத் தொழில் சந்தித்துக் கொண்டு வருகிறது என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், பொதுப்பணித்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி (பேக்கேஜ் டெண்டர்) கோரக்கூடிய நடைமுறை ரத்து செய்யப்பட்டது.  ரூ.15 கோடி  மதிப்பீட்டிற்கு மேல் உள்ள சிவில் மற்றும் மின் பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள  ஆணை வெளியிடப்பட்டது. முன்தகுதி ஒப்பந்தப்புள்ளிக்கான நிதி உச்சவரம்பு 2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தப்பட்டது.  புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல் மண்டல தலைமைப் பொறியாளர்கள் அளவிலேயே மேற்கொள்ள ஆணை வெளியிடப்பட்டது. ஒப்பந்ததாரர் பதிவு ஓராண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்று மாற்றப்பட்டது. மதிப்பீடுகள் தயாரிப்பதற்கான தரவினை தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு திருத்தியமைக்க குழு அமைக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் வகுப்பு-1ல் பண வரம்பு 10 முதல் 25 கோடி ரூபாயாகவும், செல்வநிலைச் சான்று 1 கோடி ரூபாயாகவும், புதிய வகுப்பு-1ஏ ஏற்படுத்தி அதற்கு பண வரம்பு ரூ.25 கோடிக்கு மேல் நிர்ணயித்து - அதுக்கு solvency ரூ. 3 கோடி என்று நிர்ணயிக்க அகில இந்திய கட்டுநர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். பிற வகுப்புகளுக்கு தற்போதுள்ள  solvency 30 விழுக்காட்டில் இருந்து -10 விழுக்காடாக குறைக்க கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அவரே சொன்னார், கலைஞருடைய வாரிசு என்று. எனவே, அவர் வழியிலே இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே முத்தமிழறிஞர் கலைஞருடைய மகன் ஆகவே இந்த மேடையிலே இப்போது நான் அறிவிக்கிறேன்.

அகில இந்தியக் கட்டுநர் கழகத்தின் கோரிக்கையை பரிசீலித்து- புதியதாக வகுப்பு 1-ஏ ஏற்படுத்தி, solvency 10 விழுக்காடாக அதாவது ரூ.2.50 கோடி எனவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இதர வகுப்புகளுக்கான Solvencyஅனைத்து நிலை ஒப்பந்ததாரர்களும் பயன்பெறக்கூடிய வகையில் 30 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். இப்போது நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கப் போகிறேன். இப்போது நான் வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர  நீங்கள் முன்வர வேண்டும்.

இது நமது ஆட்சி, மக்களுக்காக நடைபெறக் கூடிய ஆட்சி. அந்த உணர்வோடு தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்களும் எப்போதும் போல் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் துணை நிற்கக்கூடியவர்கள். எனவே, அதைத்தொடர்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும். உங்களுடைய ஊக்கமும் ஆக்கமும் எங்களுக்குக் கிடைத்தால் தான் நாங்கள் பணியாற்ற முடியும், நாங்கள் பணியாற்றினால் தான் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு போய் சேர்க்க முடியும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும்  நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ரூபி மனோகரன், அனைத்திந்திய கட்டுநர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஆர்.என்.குப்தா, துணைத் தலைவர் எஸ்.அய்யநாதன், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் மாநிலத் தலைவர் ஆர்.சிவகுமார், தெற்கு மையத் தலைவர் எல்.  சாந்தகுமார், 30-வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,All India Builders' Conference , We must come forward to build affordable housing for the poor, simple and vulnerable: Chief Minister MK Stalin's speech at the opening of the All India Builders' Conference
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...