×

மந்தனா 123, ஹர்மன்பிரீத் 109 ரன் விளாசல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா அசத்தல் வெற்றி

ஹாமில்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில், ஸ்மிரிதி மந்தனா - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்தியா 155 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட் செய்தது. மந்தனா, யாஷ்டிகா இணைந்து இன்னிங்சை தொடங்கினர். யாஷ்டிகா 31 ரன் விளாசி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் மிதாலி ராஜ் 5, தீப்தி சர்மா 15 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  

இந்தியா 78 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், மந்தானா - ஹர்மன்பிரீத் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்து அசத்தினர். மந்தனா 123 ரன் (119 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ரிச்சா 5, பூஜா 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஹர்மன்பிரீத் 109 ரன் (107 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினார். இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது. ஸ்நேஹ் ராணா 2, மேக்னா சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 318 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, டோட்டின் - ஹேலி மேத்யூஸ் தொடக்க ஜோடி 12.1 ஓவரில் 100 ரன் சேர்த்து நம்பிக்கையை கொடுத்தது. அந்த அணி எளிதில் வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  டோட்டின் 62 ரன் (46பந்து, 10பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ஸ்நேஹ் ராணா பந்துவீச்சில் மேக்னா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கைசியா 5, கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 1 ரன் எடுத்து மேக்னா சிங் வேகத்தில் வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஹேலி மேத்யூஸ் 43 ரன் எடுத்து ராணா சுழலில் மூழ்க, வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்ப்பின்றி சரணடைந்தது.

முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்ந்த நிலையில், அடுத்த 62 ரன்னுக்கு 10 விக்கெட்டையும் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் (40.3 ஓவர்) பரிதாபமாக சுருண்டு 155 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய தரப்பில் ஸ்நேஹ் ராணா 3, மேக்னா சிங் 2, ஜுலன் கோஸ்வாமி, ராஜேஸ்வரி, பூஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.மந்தனா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த விருதை ஹர்மன்பிரீத்துடன் பகிர்ந்துகொள்வதாக அறிவித்து அனைவரது பாராட்டையும் அள்ளினார்.

* மிஞ்சினார் மிதாலி
அதிக உலக கோப்பையில் விளையாடியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். இது அவருக்கு 6வது உலக கோப்பை. நேற்றைய ஆட்டத்தின் மூலம் உலக கோப்பையில் அதிக ஆட்டங்களுக்கு (24) கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையையும் மிதாலி படைத்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (23 போட்டி) சாதனையை மிதாலி மிஞ்சியுள்ளார்.

* ஜுலன் உலக சாதனை
இந்திய வேகம் ஜுலன் கோஸ்வாமி நேற்று வெஸ்ட் இண்டீசின் அனிசா முகமது விக்கெட்டை வீழ்த்தியபோது, உலக கோப்பை விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியாவின் லின் ஃபுல்ஸ்டனை பின்னுக்குத் தள்ளி (1982-1988, 39 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.


Tags : Mandana ,Harmanpreet 109 ,India , Mandana 123, Harmanpreet 109 India beat West Indies by a huge margin
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...