×

தனி ஒருவனாக போராடினார் ஷ்ரேயாஸ் இந்தியா 252 ரன்னில் சுருண்டது: பும்ரா வேகத்தில் இலங்கையும் திணறல்

பெங்களூரு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய ஷ்ரேயாஸ் 92 ரன் விளாசினார். எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பகல்/இரவு போட்டியாக நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. மயாங்க் 4 ரன், கேப்டன் ரோகித் 15 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 29/2 என அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. ஹனுமா - கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தது. ஹனுமா 31 ரன், கோஹ்லி 23 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

நம்பிக்கையுடன் அடித்து விளையாடிய ரிஷப் பன்ட் 39 ரன் (26 பந்து, 7 பவுண்டரி) விளாசி எம்புல்டெனியா சுழலில் கிளீன் போல்டானார். ஜடேஜா 4 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இந்தியா 148 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. ஒரு முனையில் ஷ்ரேயாஸ் தனி ஒருவனாகப் போராட... அஷ்வின் 13 ரன், அக்சர் படேல் 9, ஷமி 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். சக வீரர்கள் ஏமாற்றமளித்த நிலையில், துணிச்சலுடன் அதிரடியில் இறங்கிய ஷ்ரேயாஸ் பவுண்டரியும் சிக்சருமாக விளாசி இலங்கை பந்துவீச்சை சிதறடித்தார்.

சதத்தை நெருங்கிய அவர், துரதிர்ஷ்டவசமாக 92 ரன்னில் (98 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஜெயவிக்ரம பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது (59.1 ஓவர், 252 ரன்). இலங்கை பந்துவீச்சில் ஜெயவிக்ரம, எம்புல்டெனியா தலா 3, தனஞ்ஜெயா 2, லக்மல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி பும்ரா - ஷமி வேகக் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது.

குசால் 2,  திரிமன்னே 8, கேப்டன் கருணரத்னே 4, தனஞ்ஜெயா 10, அசலங்கா 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, இலங்கை 50 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து விழிபிதுங்கியது. பொறுப்புடன் விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன் (85 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பும்ரா வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்துள்ளது (30 ஓவர்). டிக்வெல்லா (13 ரன்), எம்புல்டெனியா (0) களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் பும்ரா 3, ஷமி 2, அக்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாளிலேயே 16 விக்கெட் சரிந்த நிலையில், இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Shreyas ,India ,Sri Lanka ,Bumra , Shreyas struggled solo India rolled to 252: Sri Lanka stumbled at Bumra pace
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...