×

திருவள்ளூர் கூட்டுறவு பண்டகசாலையில் ரூ.19.88 லட்சம் மோசடி; ஊழியர் கைது: அதிமுக பிரமுகருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் கூட்டுறவு பண்டக சாலையில் ரூ.19.88 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஊழியர் கைது செய்யப்பட்டார். மேலும் அதிமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் ஆயில் மில் அருகே கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை உள்ளது. இதன்மூலம் ஊத்துக்கோட்டை, சுதர்சன் தெருவில் பாரத் காஸ் எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்யும் அங்காடி இயங்கி வருகிறது. பண்டகசாலையில் மீஞ்சூர் அருகே சிறுவேடல் கிராமத்தை சேர்ந்த எழிலரசன்(50) என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2013-17ம் ஆண்டுவரை எல்பிஜி சிலிண்டர் விற்பனை செய்த பணத்தை கணக்கு புத்தகத்தில் வரவு வைக்காமல் எழிலரசன் ரூ.19,88294 மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து எழிலரசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுசம்பந்தமாக கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கார்த்திகேயன், சென்னை அசோக் நகரில் உள்ள வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்பி பழனிகுமாரிடம் புகாரளித்தார். அதன்படி திருவள்ளூரில் உள்ள வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில், பணமோசடி தொடர்பாக இளநிலை உதவியாளர் எழிலரசன், உடந்தையாக இருந்த மேற்பார்வையாளர் ஆனந்தன், விற்பனையாளர் லட்சுமி மற்றும் இவற்றை கண்காணிக்க தவறிய மொத்த விற்பனை பண்டகசாலை தலைவரும், திருவள்ளூர் நகர அதிமுக செயலாளருமான கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.  இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை எழிலரசனை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர். மேலும் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Tiruvallur ,Warehouse ,AIADMK , Rs 19.88 lakh fraud at Tiruvallur Co-operative Warehouse; Employee Arrested: Web for AIADMK Personality
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...