பிரின்ஸ் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் அறிவுறுத்தல்

திருவள்ளூர்: சென்னை அடுத்த பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியின் 16ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியினின் 8ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள் முனைவர் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் முதல்வர்கள் முனைவர் வி.மகாலட்சுமி, டி.சுந்தர்செல்வின் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகெங்கும் தற்போது அனைத்து தொழில்நுட்பத் துறையிலும் வியக்கத்தக்க அளவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கு இணங்க நமது பொறியியல் மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தினால் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கலாம். எதிர்கொண்டு எளிதில் வெற்றி பெறலாம். உலகம் முழுவதும் நாள்தோறும் மாறி வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாணவர்கள் தங்கள் கற்கும் முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி பெற முடியும். மாணவர்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி நாட்டில் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கல்லூரியின் நிர்வாக அதிகரிகள் கே. பார்த்தசாரதி, எம்.தருமன், எ.என்.சிவப்பிரகாசம், பி.ஆர்.ரவிராம் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: