×

தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க விழா ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டம்: மாவட்ட அமர்வு நீதிபதி பேச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மாவட்ட அமர்வு நீதிபதி,ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக பேசினார். காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்ற தொடக்க விழா நேற்று நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் குழு தலைவர் பி.திருஞானசம்பந்தம், தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு வழக்கறிஞர் பி.கார்த்திகேயன் வரவேற்றார்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் பேசியதாவது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சிறப்பாக முடிக்க மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுத்தொகை மொத்தம் ரூ.15 கோடியாக இருக்கும். தேசிய மக்கள் நீதி மன்றங்களால் நேரம் வீணாகுதல், பணம் விரயம், அலைச்சல் ஆகியன தவிர்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் சமாதானமாக போவதால் இரு தரப்பும் வெற்றி என்ற நிலையை எட்டுகின்றனர். கடந்த 2007, 2008ம் ஆண்டுகளில் தொடங்கிய வழக்குகளையும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம். இதன் மதிப்பு மட்டுமே ரூ.10 கோடி.

விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் நலன் மற்றும் சிறு குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 600 வழக்குகளுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம் என்றார். விழாவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.ராஜராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் எஸ்.செந்தில்குமார், சரவணன், வழக்கறிஞர் சங்க செயலாளர்கள் ஜான், தி.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு முதன்மை நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் செய்தார்.

Tags : National ,People's ,Court , National People's Court Opening Ceremony Plans to Complete 600 Cases in One Day: District Sessions Judge Speech
× RELATED மாலத்தீவு அதிபர் மீண்டும் அமோக வெற்றி