×

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் விரும்பியதை வன்முறை மூலம் பெறலாம்!: மேகாலயா ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு

ஜோத்பூர்: மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தேன்; அவருடன் விவசாயிகள் பிரச்னையை தீர்க்கக் கோரி அவரிடம் 5 நிமிடம் சண்டையிட்டேன்; அவர் மிகவும் திமிர்பிடித்தவராக நடந்து  கொண்டார்’ என்று தெரிவித்தார்.

இவரது பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் ஜோத்பூரில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில், ‘விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், அவர்கள் தாங்கள் விரும்பியதை வன்முறை மூலம் பெற முயற்சி செய்யலாம். ஒன்றிய அரசுக்கு நான் கூறும் அறிவுரை என்னவென்றால், விவசாயிகளுடன் மோத வேண்டாம்; அவர்கள் ஆபத்தானவர்கள். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசுவதால் எனது பதவி போனாலும் கூட நான் பயப்படவில்லை.

விவசாயிகள் பிரச்னையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். அதற்காக அவர்கள் சண்டையிட்டு உரிமைக்காக போராடுவார்கள். அவர்களின் சண்டையின் மூலம் கிடைக்காவிட்டால் வன்முறையின் மூலம் அதனை பெறுவார்கள். அவர்களால் தங்களது வாயை மூடி இருக்க முடியாது. அவர்களின் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது அவர்களுக்குத் தெரியும். எனக்கு ஒன்றிய அரசுடன் எந்த விரோதமும் இல்லை; விவசாயிகளுக்காக எனது பதவியை விட்டு வெளியேறவும் தயாராக உள்ளேன்’ என்றார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் அரியானாவில் நடந்த நிகழ்ச்சியின் போது, பாஜக அரசை விமர்சிக்க வேண்டாம் என்று தனது நண்பர்கள் அறிவுறுத்தியதாக சத்யபால் மாலிக் கூறியிருந்தார். மேலும், அமைதியாக இருந்தால் ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவி கிடைக்கும் என்றும் கூறியதாகவும், ஆனால் அந்த பதவிகளை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Meghalaya Governor , Farmers, demand, violence, can get, Meghalaya Governor m
× RELATED கோவா பாஜ அரசில் எல்லாவற்றிலும் ஊழல்: மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு