×

உக்ரைன் எல்லையில் நாளை மறுநாள் அமெரிக்கா போர் பயிற்சி: ரஷ்யா மீது போர் தொடுக்க ‘நேட்டோ’ நாடுகள் ஆயத்தம்?

ஒஸ்லோ: உக்ரைன் எல்லையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் 3ம் உலக போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான ‘நேட்டோ’-வில் உக்ரைன் நாடு சேர்வதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேட்டோவில் உக்ரைனை சேர்ப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் கடுப்பான ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

இரண்டு வாரங்களாக போர் நடைபெறும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் முக்கிய நகரங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் போன்றவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டன. இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும் கூட, உக்ரைன் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இல்லாததால், அந்நாட்டை பாதுகாக்க நேரடியாக நேட்டோவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  அதனால் மறைமுகமாக நேட்டோ அமைப்பு நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேற்றிரவு பேசுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் போருக்கு செல்ல மாட்டோம்.

அதேவேளையில் நேட்டோ நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அது மூன்றாம் உலகப் போராக இருக்கும்’ என்று எச்சரித்தார். இந்நிலையில் நேட்டோ படைகளின் துருப்புகள் ரஷ்யாவின் அண்டை நாடான நார்வேயில் குவிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யப் படைகள் நடத்தி வரும் நிலையில், கீவ் எல்லையில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருவதற்கான காரணம், நேட்டோ உறுப்பு நாடுகளின் பயிற்சித் திட்டம் என்றும், முன்பே திட்டமிட்ட வரையறையின் கீழ் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் நேட்டோ படைகளின் குவிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நார்வே பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், ‘நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. நார்வேயின் நட்பு நாடுகளின் பலத்தை வலுவூட்டும் வகையில் இந்த பயிற்சியை மேற்கொள்கிறோம்’ என்றார். நார்வேயில் 27 நாடுகளைச் சேர்ந்த சுமார் 30,000 துருப்புகள், 200 விமானங்கள், 50 கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த துருப்புகள் ‘கோல்ட் ரெஸ்பான்ஸ் - 2022’ என்ற பயிற்சியில் பங்கேற்கும் என்றும் கூறப்படுகிறது. மார்ச் 14ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கும் இந்த பயிற்சியில் மேற்கத்திய நாடுகள் தங்கள் போர் திறன்களை மேம்படுத்தும்; மேலும் உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அதன் வியூகங்கள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அண்டை நாடுகளான ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகியவை அதிகாரப்பூர்வமாக ராணுவ பயிற்சியில் அணிசேராத நாடுகளாக இருந்தாலும் கூட, இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன. 3,800 துருப்புகளுடன் அமெரிக்க வீரர்கள் நேட்டோவிற்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். இதுகுறித்து நார்வேயில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உக்ரைனின் எல்லைகளுக்கு அருகே நேட்டோ நாடுகள் ராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதால், பிராந்தியத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு உதவாது’ என்றார். ஏற்கனவே, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் போர் தொடங்குவதற்கு முன்னதாக, ரஷ்ய - உக்ரைன் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டன.

சுமார் ஒரு லட்சம் வீரர்கள் அந்த பயிற்சியில் பங்கேற்றதாக கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது நேட்டோ படைகள் நார்வேயில் குவிக்கப்பட்டு வருவதால், ரஷ்யாவின் நகர்வுகளை பொறுத்தே அடுத்தகட்ட தாக்குதல்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அதிபர் மூன்றாம் உலகப் போர் குறித்து கூறிய கருத்தும், தற்போது நார்வேயில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு வருவதால் சர்வதேச அளவில் உக்ரைன் விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Tags : US ,Ukraine ,NATO ,Russia , Ukraine border, tomorrow, the next day, US, war training
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!