×

கட்டுமான பொருட்கள் திருட்டு இன்ஜினியர்கள் 2 பேர் சிக்கினர்: ரூ.10 லட்சம் பொருட்கள் மீட்பு

ஆவடி: கட்டுமான பொருட்களை திருடிய இன்ஜினியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு அறையில் சேமித்து வைத்துள்ளனர். சமீபத்தில் கட்டுமான பொருட்களை ஆய்வு செய்தபோது அங்கிருந்த கதவு, ஜன்னல், பெயிண்ட், எலக்ட்ரிக்கல் பொருட்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதையடுத்து கட்டுமான நிர்வாகம் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு லாரியில் கட்டுமான பொருட்களை இரண்டுபேர் திருடிச்செல்வது பதிவாகியிருந்தது. இதுபற்றி தனியார் நிறுவன மேனேஜர் செல்வராஜ்(41) கொடுத்த புகாரின்படி, திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், எஸ்ஐக்கள் விஜயகுமார், பழனி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவரும் இன்ஜினியர்கள் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகர், முதல் தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் (45), வேலூர் மாவட்டம், காட்டுப்புதூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நவீன்குமார் (30) ஆகியோர் கட்டுமான பொருட்களை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் பிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இருவரும் கட்டுமான பொருட்களை லாரி மூலம் திருடிச்சென்று மிட்டனமல்லியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருப்பதைஒப்புக்கொண்டனர். இதன்படி போலீசார் அந்த வீட்டிற்கு சென்று ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்து சுப்பிரமணியம், நவீன்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Construction, theft, engineers, 2 caught
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...