தாரமங்கலம் அருகே காஸ் சிலிண்டர் வெடித்து வீடு, மளிகை கடையில் தீ-₹2 லட்சம் பணம், 10 பவுன், பொருட்கள் சாம்பல்

தாரமங்கலம் : தாரமங்கலம் அருகே காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு, மளிகை கடையில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ₹2 லட்சம் பணம், 10 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.சேலம் மாவட்டம், தாரமங்கலம் எடையப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெங்கடாசலம் மனைவி, குழந்தைகள் மற்றும் தாய் தங்கம்மாளுடன் வசித்து வருகிறார். வீட்டின் முன்பகுதியில், ஜெயலட்சுமி மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வெங்கடாசலம், காஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார்.

அப்போது, காஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டரில் தீப்பிடித்தது. அங்கு பற்றிய தீ மளமளவென பரவி, அருகில் இருந்த பொருட்களில் பட்டு எரியத்தொடங்கியது. இதை தொடர்ந்து மளிகை கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்த மகன்களையும், மாமியாரை அழைத்து கொண்டு வெளியே ஓடி வந்து விட்டார். தொடர்ந்து, வெங்கடாசலம் தீயை அணைக்க முயன்ற போது, தீ வீடு முழுக்க பரவி எரிய துவங்கியது.

இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு, அருகிலிருந்தவர்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால், அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் கூடுதலாக இருந்த 2 சிலிண்டர்களை, பத்திரமாக வெளியே எடுத்து வந்தனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, தீயை முழுமையாக அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு கட்டுவதற்காக பீரோவில் வைத்திருந்த ₹2 லட்சம், 10 பவுன் நகை, தங்க காசுகள், அரைகிலோ வெள்ளி பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும், வீட்டில் இருந்த ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்கள், வீட்டு பத்திரம், நிலப்பத்திரம், ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய சான்றுகள் எரிந்து நாசமானது. தீ விபத்தில் மொத்தமாக ₹10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: