×

வனப்பரப்பை அதிகரித்து, பசுமை சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்; ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: வனப்பரப்பை அதிகரித்து, பசுமை சூழலை உருவாக்க வேண்டியது அவசியம் என ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். மாநில முன்னேற்றத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதேபோல், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் உளமார நம்புகிறேன். இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுகிறது.

இன்று புவி வெப்பமாகுதல் நாட்டு அளவில் அல்ல, உலக அளவில் அதிகமாகப் பேசப்படுகிறது. அதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகள் எல்லாம் நட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

அதை மனதில் வைத்துக்கொண்டு தான், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்கின்ற பெயரை இதற்காகச் சூட்டினோம். அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான, வெளிப்படையான அனுமதி முறைக்கு வித்திட்டிருக்கிறோம். இப்போது முதல் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவரோடு சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

ஆகவே, தொழில், சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தினுடைய சம நண்பர்கள் என்ற அளவிலே முன்னெடுத்துச் செல்லத் தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, தொழில் துவங்க அனுமதிக்கப்படும் அனுமதிகளை இன்னும் விரைவுபடுத்தும் ஆலோசனைகளை நீங்களெல்லாம் இங்கே வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் என்னுடைய தொடக்க உரையாக சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,MK Stalin ,Collectors' Conference , It is necessary to increase the forest cover and create a greener environment; Chief Minister MK Stalin's speech at the Collectors' Conference
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...