×

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

புதுடெல்லி: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விலகியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக்கோரி நடிகர் ஏழுமலை,  பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை  தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ‘தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும். தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்,’ என கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏழுமலை தாக்க செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நடிகர் சங்கம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதில் இருந்து நான் விலகி விட்டேன். அதனால், தற்போதும் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்கிறேன். இதற்கு தனிப்பட்ட எந்த காரணமும் கிடையாது என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பரிந்துரை செய்கிறேன்,’ என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என தெரிகிறது.

Tags : Supreme Court ,South Indian Actor Association , Supreme Court judge withdraws from South Indian Actors' Union election case
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...