×

4 மாநில தேர்தல் வெற்றியால் உற்சாகம் குஜராத்தில் பிரசாரம் தொடங்கினார் மோடி: அகமதாபாத்தில் பேரணி

அகமதாபாத்: ‘கிராமப்புற வளர்ச்சி குறித்து மகாத்மா காந்தி கண்ட கனவு பலிக்க வேண்டும்.’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதும், தனது சொந்த மாநிலமுமான குஜராத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அகமதாபாத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜீப்பில் அவர் நீண்ட தூரம் பேரணி சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் நின்று அவரை வரவேற்று கோஷமிட்டனர். பின்னர், அங்கு நடந்த பிரமாண்ட பேரணியில் கலந்து கொண்டார். தொடர்ந்து பஞ்சாயத்து மகாசம்மேளனத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், ‘‘ஜனநாயக சக்தியால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்க முடியாத மாநிலங்களில் கூட பாஜ தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்ததால் தான் இது சாத்தியமானது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், கிராமப்புறங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என் மகாத்மா காந்தியின் கனவு நிறைவேற வேண்டும். கிராமங்கள் தன்னிறைவு பெற்றதாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டும். கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டு பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்,” என்றார்.

உபி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றுள்ள வெற்றியால் மகிழ்ச்சி அடைந்துள்ள மோடி, இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் மீது கவனத்தை திருப்பி உள்ளார். இந்த மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்காக, இப்போதே அவர் பிரசாரத்தை தொடங்கி விட்டதாகவே, குஜராத்தில் அவர் நேற்று நடத்திய பேரணி கருதப்படுகிறது.

பாஜ.வின் பி டீமா? மாயாவதி ஆவேசம்; உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், ‘‘பகுஜன் சமாஜ் கட்சி பாஜ.வின் பி-டீம் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டதால் முஸ்லிம்கள், பாஜ எதிர்ப்பு வாக்காளர்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை.  பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் தீவிரமாக இறங்கவில்லை என்ற பிரசாரத்தை சமாஜ்வாடி கட்சி பரப்பியது. உண்மையில் அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாஜ.வை பகுஜன் சமாஜ் எதிர்த்தது. மும்முனை போட்டி நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். பாஜவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்திருக்கலாம்,’’ என்றார்.

Tags : Modi ,Gujarat ,Ahmedabad , Modi launches campaign in Gujarat: Rally in Ahmedabad
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி