×

ஒன்றிய அரசு பிற்போக்கு கருத்துகளை புகுத்துவதை தடுக்க கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு: துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒன்றிய அரசு பிற்போக்கு கருத்துகளை புகுத்துவதை தடுக்க கல்வியை முழுமையாக மாநில பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ேகாவையில் நடந்த தென் மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை:
தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பெற்று மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ்கின்ற பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது.

2020-21ம் ஆண்டுக்கான தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பில் அனைத்து இந்திய அளவில் தமிழ்நாட்டின் 19 பல்கலைக்கழகங்கள் மற்றும் 33 கல்லூரிகள் முதல் நூறு இடங்களுக்குள் உள்ளன. சென்னையிலுள்ள லயோலா கல்லூரி அனைத்து இந்திய அளவில் மூன்றாவது இடமும் பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. பள்ளிக் கல்வி முடித்து, உயர்கல்விக்கு பயில வரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 விழுக்காடு; ஆனால், தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு என்ற அளவுக்கு மிக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவிலான சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது உயர்கல்வியில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனை. அதுமட்டுமல்ல, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்குகிறது.

தமிழ்நாட்டில் 1,553 கல்லூரிகள், 52 அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், 1,096 தொழிற்கல்வி நிறுவனங்கள் உயர்கல்வி அளித்து தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன. தொழிற்கல்வியிலும், மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்து, சாதாரண நிலையில் உள்ளவர்களும் சிறந்த நிலைக்கு உயர வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உயர்கல்வித் துறைக்கு 5,369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தொழிற்கல்வியிலுள்ள பாடநூல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர்கல்வியின் முக்கியமான குறிக்கோளான அனைவருக்கும் வேலை தரும் கல்வி வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை உங்களுக்கு இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். திறன் சார்ந்த கல்வியும் பயிற்சியும் பாடத்திட்டங்களில் கட்டாயப்படுத்துதல் அவசியம். அதனால்தான், மார்ச் 1 அன்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தை மாணவச் செல்வங்களுக்காகத் துவங்கி வைத்தேன்.பல்கலைக்கழகத்தின் தரத்தையும் செயல்பாட்டையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுவோர் துணைவேந்தர்கள்தான்.நீங்கள் அனைவரும் அறிவியல்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்தெடுக்கும் வகையில் உங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 மேலும், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதை வைத்து, ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும் போக்கும் கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும். மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம்.

அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். இந்த மாபெரும் மாநாடு தன் நோக்கங்களில் வெற்றி பெறவும் அதன் மூலம் நமது நாட்டின் உயர்கல்வி மேன்மை பெற வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : EU government ,Chief MC ,Vice Chancellors Conference ,KKA Stalin , United States Government, reactionary opinion, education, Vice-Chancellors Conference, Chief MK Stalin
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்