×

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ், இளவரசி 21ம் தேதி ஆஜராக சம்மன்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி காலமானார். இவர் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால், அவரது மரணத்தில் ஓபிஎஸ் உட்பட பலரும் சந்தேகத்தை கிளப்பினர். குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

இதையேற்று, கடந்த 2017 செப்டம்பரில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் சார்பில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ டாக்டர்கள், அரசு மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட  154 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. 95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் சில முறை ஓபிஎஸ் தரப்பிலும், சில முறை ஆணையம் தரப்பிலும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு காரணமாக 2 ஆண்டுகளாக ஆணையம் செயல்படவில்லை. இதனால், ஆணையம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், ஆணையத்தின் விசாரணை மீண்டும்  தொடங்கியுள்ளது. கடந்த 2ம் தேதி 5 பேரும், 3ம் தேதி 3 டாக்டர்களும் ஆஜரானார்கள். இந்த சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், ஜெயலலிதாவை ஓபிஎஸ் மருத்துவமனையில் பார்த்தாரா, இல்லையா என்பதும், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை எதற்காக கிளப்பினார் என்பது குறித்தும் தெரிய வரும்.
ேமலும், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது 75 நாட்கள் அவருடன்தான் மருத்துவமனையில் இருந்தார். எனவே, அவர் ஜெயலலிதாவை எத்தனை முறை சந்தித்தார். அவர், ஜெயலலிதாவிடம் பேசினாரா, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தொடர்பாக தெரியுமா, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : OBS ,Princess ,Jayalalithaa , Jayalalithaa's death, Commission of Inquiry, OBS, Princess
× RELATED சுற்றுலா பயணிகளின் வசதிக்காக;...