×

சிறையில் சொகுசு வாழ்க்கைக்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு சசிகலா, இளவரசிக்கு ஜாமீன்

சென்னை: சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை இருந்தபோது வருமானத்திற்கும் அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.அப்போது, சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரிகள் கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது குற்றவாளியாக கஜராஜ் மாகனூர், 5வது குற்றவாளியாக தண்டனை கைதிகளாக இருந்த வி.கே.சசிகலா, 6வது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணபட் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் முதல் மற்றும் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் கிருஷ்ணகுமார் மற்றும அனிதா ஆகியோர் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதால், அவர்கள் ஆஜராகவில்லை. வழக்கில் 3வது குற்றவாளி சிறைதுறை இணை கண்காணிப்பாளர் சுரேஷ், 4வது குற்றாளியான போலீஸ்காரர் கஜாராஜ் மாக்கன்னூரு, 5வது குற்றவாளி வி.கே.சிசிகலா மற்றும் 6வது குற்றவாளி இளவரசி ஆகிய4பேரும் ஆஜராகினர்.

அப்போது சசிகலா மற்றும் இளவரசி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இவ்வழக்கில் தங்கள் கட்சிக்காரர்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி, இருவரும் தலா ரூ.3 லட்சம் ரொக்கம் சொந்த பிணை கொடுத்து ஜாமீன் பெற அனுமதி வழங்கினார். அதேபோல் போலீஸ் அதிகாரி சுரேஷ் மற்றும் போலீஸ்காரர் கஜாராஜ் மாக்கன்னுரு ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

அதை ெதாடர்ந்து இவ்வழக்கின் முதல் மற்றும் 2வது குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதால், அவர்கள் இருவர் தவிர மற்ற 4 குற்றவாளிகளும் வரும் ஏப்ரல் 16ம் தேதி விசாரணையின் போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டும், வழக்கில் ஆஜராவதற்கு விலக்களிக்ககோரி கடந்த 4 நாட்களுக்கு முன் சசிகலா மற்றும் இளவரசி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Sasikala ,Princess , Luxury life in prison, bribery, lawsuit, Sasikala, bail for the princess
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்