×

நெல்லை தாமிரபரணி ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு : பொதுமக்கள் பக்தி பரவசம்

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் நேற்று காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன் கோயில் உள்ளது. அந்த பகுதியில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை அங்குள்ளவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் காலில் ஏதோ ஒன்று தட்டுபட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் ஆற்றில் மூழ்கி பார்த்த போது அம்மன் சிலை இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் ஆற்றில் இறங்கி சுமார் 3 அடி உயரம் கொண்ட அம்மன் சிலையை வெளியே எடுத்தனர். பின்னர் அதனை படித்துறை அருகே உள்ள திரிசூலி மாரியம்மன் கோயிலில் வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் பரவியதும் வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து அம்மன் சிலையை வழிபட்டனர். இதுகுறித்து கோயில் பூசாரி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, கடந்த 8ம் தேதி திரிசூலி மாரியம்மன் கோயிலில் வருஷாபிசேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் போது அம்மன் சிலையை கண்டெடுத்துள்ளனர். இது மாரியம்மன் சிலை ஆகும். பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர் என்றார்.

Tags : Nellai Tamiraparani , Nellai Tamiraparani, Goddess statue, Discovery
× RELATED நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்...