×

திருவானைக்காவல் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்: பெரியநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பஞ்சப்பூதங்களில் நீர்த்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவ விழா 48 நாட்கள் நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.15 மணியளவில் சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது.

வரும் 28ம் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றம் நடக்கிறது. அன்று காலை ேதருக்கு முகூர்த்தக்கால் நடப்படும். அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், அதனைத்தொடர்ந்து சூரியபிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், காமதேனு, கைலாச வாகனம், கிளி, வெள்ளி ரிஷபம் ஆகிய வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் மாதம் 2ம் தேதி காலை நடைபெறுகிறது.

அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3ம் தேதி வெள்ளி மஞ்சத்திலும், 4ம் தேதி வெள்ளிக்குதிரை வாகனம் மற்றும் பல்லக்கிலும், 5ம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறும். 6ம் தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சொக்கர் உற்சவம் மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 16ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. 18ம் தேதி பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மலைக்கோட்டை
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் 17ம் தேதி இரவு நடைபெறுகிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். 18ம் தேதி தீர்த்தவாரியும், இரவு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பெரியநாயகி அம்மன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி பெரியநாயகி அம்மன் கோயில் மாசி திருவிழா நடைபெற்றது. மார்ச் 1ம் தேதி சிவராத்திரி இரவு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. இதனை அடுத்து புதன்கிழமையன்று கோவிலுக்கு அருகே உள்ள மணிமுக்தா ஆற்றங்கரையில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் கோயிலைச் சுற்றி வந்து திருத்தேரில் அமர வைக்கப்பட்டார்.தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


Tags : Thiruvanaikaval temple ,Periyanayaki Amman temple , Flag hoisting at Thiruvanaikaval temple commotion: Election at Periyanayaki Amman temple
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்