காங். கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய இடங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஏற்கனவே இருந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இதன்காரணமாக 2024ம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின்போது மிகப்பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையானது முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம். 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம்; நேர்மறையாக சிந்திக்க வேண்டும். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: