தேர்தலில் தோல்வியுற்ற பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் ராஜினாமா.. மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றுவோம் என உறுதி!

சண்டிகர் : பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.மாவீரர் பகத்சிங்கின் சொந்த ஊரான கட்கர்கலானில் வரும் 16ம் தேதி ஆம் ஆத்மி அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களிடம் தோல்வியுற்றார். பாதார், சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வியடைந்தார்.

பஞ்சாப் சட்டசபை தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து சரண்ஜித்சிங் சன்னியும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. ராஜினாமா கடிதத்தை சண்டிகரில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சரண்ஜித் வழங்கினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாப் முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளேன் என சரண்ஜித் சிங் சன்னி பேட்டி அளித்துள்ளார். புதிய அரசு தொடங்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்க ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்  பஞ்சாபில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும்.பஞ்சாப் மக்களுக்கு தொடர்ந்து தொண்டாற்றுவோம். மக்கள் மத்தியில் இருந்து கடமையை செய்து கொண்டே இருப்போம், என்றார்.

Related Stories: