×

திருப்பத்தூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான எழுத்துடை நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு. முனிசாமி, யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் செ.ரஜினி, முனைவர் பட்ட ஆய்வாளர் ச. மணிமேகலை ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 1200 ஆண்டுகள் பழமையுடைய எழுத்துடை நடுகல் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து முனைவர் க. மோகன்காந்தி கூறியதாவது:-

 திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கொரட்டி என்னும் கிராமம் திருப்பத்தூரிலிருந்து சேலம் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அவ்வூரில் உள்ள ஏரிக்கரையின் தெற்குக் கரையில் திக்கியம்மன் என்னும் பெயரில் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதாவது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்துக்களுடன் கூடிய நடுகல் ஒன்று எங்கள் ஆய்வுக் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நடுகல் 5 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் எழுத்துக்களுடன் காணப்படுகிறது. நேர்த்தியான கல் தச்சனைக் கொண்டு நடுகல் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் நோக்கிய வண்ணம் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரிமுடிக்கப்பட்டத் தலைக் கொண்டை வலது பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. வலது கையில் குறுவாள் ஒன்றை நடுகல் வீரன் வைத்துள்ளான்.இடது கையில் அழகிய கோலத்துடன் வில் காணப்படுகிறது. இவ்வீரனின் கழுத்தில் ஒரு அம்பும், மார்பில் ஒரு அம்பும் பாய்ந்துள்ள கோலத்துடன் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நடுகல் எழுத்துக்கள் அழகான கோடுகளை வரிக்கு வரி இட்டு, ஏழு வரிகளில் எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்துக்கள் தமிழ் எழுத்தின் ஒருவகையான வட்டெழுத்துக்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவ்வெழுத்தின் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டாகும். இவ்வெழுத்துக்களைத் தொல்லியல் அறிஞர் முனைவர் அர. பூங்குன்றன் அவர்கள் வாசித்துக் கூறினார்.  பெரும்பாண அரசரின் வீரன் ஆலம்பட்டி ஆட்டு மந்தையைக் கவர்ந்து செல்ல பெரியந்தை நீலனார் என்ற வீரன், ஆட்டு மந்தையை மீட்டு இறந்தான் என்று இந்நடுகல் வாசகம் எடுத்துரைக்கிறது.

இந்நடுகல் வாசகம் புதிய சில வரலாற்றுச் செய்திகளைப் பற்றிப் பேசுகிறது. பெரும்பாணர் என்ற அரச பரம்பரையினரைப் பற்றித் திருப்பத்தூர் பகுதியில் வரும் முதல் நடுகல் இதுதான். மேலும் மாட்டு மந்தையைப் பற்றி பல நடுகற்கள் பேச, இந்நடுகல் ஆட்டு மந்தையைப் பற்றிப் பேசுகிறது. ஆநிரைகள் (மாடு, ஆடு) தங்கும் இடத்தைக் குறிக்கும் பட்டி (ஆலம்பட்டி) என்ற சொல் அரிதினும் அரிதாக இந்நடுகல்லில் காணப்படுகிறது.

இந்நடுகல் தன் ஊர் ஆட்டுமந்தையைப் பகைவர் கைக்கொள்ள அவர்களை எதிர்த்துத் தன் உயிரை விட்ட வீர மறவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பது தெளிவாகிறது.
இந்நடுகல்லை தற்போது திக்கியம்மன் என்னும் பெயரில் ஆடி மாதம் ஊர் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்தல், கடா வெட்டுதல் உள்ளிட்டப் படையல்களை வைக்கின்றனர். 1200 ஆண்டுகள் பழமையுடைய இந்நடுகல் தமிழர் பண்பாட்டில் இன்றளவும் கலந்து தெய்வமாக வணங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupathur , Tirupati: Dr. K. Mohankanthi, Professor of Tamil, Pure Heart College, Tirupati, M. Munisamy, Land Arts, Unique Arts and
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...