×

வத்ராப் ஜிஹெச் கட்டிடம் ‘வீக்’-மராமத்து பணி செய்ய கோரிக்கை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கட்டிடங்களை மராமத்து பணி செய்வதுடன், காலி பணியிடங்ளையும் நிரப்ப வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், நெடுங்குளம், பிளவக்கல் அணை, மேலக்கோபாலபுரம், மகாராஜபுரம், கொடிக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் 600க்கும் மேற்பட்டோர் வந்து வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மொத்தமுள்ள 92 படுக்கையில் 45 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 8 டாக்டர்கள் உள்ளனர்.

இதிலும் சிலர் விடுமுறை எடுத்தால் அவ்வளவுதான். இதனால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. பிரசவத்திற்கென வாரம் ஒருமுறை மட்டும் பெண் டாக்டர் வந்து செல்கிறார். இதனால் பிரசவத்திற்கு வரும் ஏழை, எளிய பெண்கள் அருகிலுள்ள ஊர்களின் அரசு மருத்துவனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. அதோடு மருத்துவ பணியாளர்கள் 4 பேர், தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 பேர் மட்டுமே உள்ளனர்.

இரவு காவலர் கடந்த பல ஆண்டுகளாக இல்லவே இல்லை. மேலும் மருத்துவமனையின் கட்டிடங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாததால் பாழடைந்த நிலையில் உள்ளது. பெண்கள் வார்டின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் எப்ேபாது பெயர்ந்து விழும் என்ற அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். கழிப்பறைகள் முழுவதும் இடிந்த நிலையில் உள்ளதால் உள்ளே போக முடியாதபடி தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுவதும் பராமரிப்பு பணி பார்க்காமல் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை உடனே மராமத்து செய்ய வேண்டும். கழிப்பறைகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். டாக்டர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிரசவ பெண் டாக்டரை நிரந்தரமாக்க வேண்டும். மருத்துவம், தூய்மை பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமிக்க வேண்டும். இரவு காவலரை உடனே நியமிக்க வேண்டும். பழுதடைந்து கிடக்கும் குழந்தைகள் வளர்ச்சி பற்றி ஸ்கேனை சரிசெய்ய வேண்டும்.

இசிஜியுடன் எக்கோ மிஷின் வசதியும் ஏற்படுத்த வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் எக்ஸ்ரே கருவி வாங்குவதுடன், அதை இயக்க ஆபரேட்டரை நியமிக்கவும் வேண்டும். டாக்டர்களுக்கு போதிய மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். இத்துடன் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றனர்.

Tags : Vatrab GH Building ,Maramatha , Vatrairuppu: Vatrairuppu Government Hospital buildings to be repaired and vacancies to be filled
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...