ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காந்தி நகரை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (18). கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் நடந்து சென்ற போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடம் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயின், செல்போனை பறித்து சென்றனர்.
தகவலறிந்ததும் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்ஐக்கள் கௌசல்யா, சரவணக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக் மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் பதுங்கியிருந்தது தெரிந்தது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதிக்கு போலீசார் சென்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். எனினும் தொடர்ந்து விரட்டி சென்று 1 மணிநேர போராட்டத்திற்கு பின் கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் தங்கச்சியம்மபட்டியை சேர்ந்த அஜித்(21), பகவதி (21) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தங்க செயின், செல்போனை பறிமுதல் செய்தனர். சினிமா பாணியில் கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
