திண்டுக்கல் கொசவப்பட்டியில் அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!: சீறிப்பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்கிய வீரர்கள்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில்,  திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர். வெற்றிபெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு சைக்கிள், பீரோ, கட்டில், எல்இடி டிவி மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியைக் காண சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

Related Stories: