×

தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் எண்களில் புகார் தெரிவிக்கலாம்-மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

ஊட்டி : தரமற்ற பொருட்கள் யாரேனும் விற்பனை செய்தால், நுகர்வோர்கள் வாட்ஸ் அப் எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்தார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை வகித்து பேசியதாவது:

நுகர்வோர்கள் பொருட்கள் வாங்கும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன் அதன் தரம், உத்தரவாதம், தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் பொருட்களை வாங்க வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் கடைகளிலிருந்து வாங்கும் பொருட்களின் தரம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கூட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவ, மாணவியர் மிகுந்த விழிப்புணர்வு பெறுவார்கள். நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதே போல், வினாடி வினா போட்டிகளையும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நுகர்வோர்கள் பொருட்கள் வாங்கும் போது ஏதேனும் அவற்றில் குறைபாடுகள் இருப்பின் 9444042322 என்ற எண்ணிற்கு புகார்கள் தெரிவிக்கலாம்.

அவ்வாறு புகார்கள் பெரும் பட்சத்தில் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தரமற்ற பொருட்கள் நுகர்வோர்களுக்கு வழங்குவது உறுதியானால் கட்டாயமாக சம்மந்தப்பட்ட நபர்கள் அல்லது அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன உலகில் நுகர்வோர்கள் எந்த பொருட்கள் வாங்கினாலும், மிகவும் விழிப்புடன் இருந்து தரமான பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகானந்தம், பொது விநிேயாகத் திட்ட துணை பதிவாளர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், இந்திய தர நிர்ணய அதிகாரி ராஜிவ், குடிமை பொருள் வழங்கில் தனி தாசில்தார் சங்கர நாராயணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : WhatsApp , Ooty: Consumers can complain to WhatsApp numbers if anyone sells substandard goods, District Revenue Officer
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...