×

வானதி சீனிவாசனின் கோரிக்கை அறியாமையா..அக்கறையின்மையா?: ரயில்வே அமைச்சரிடம் அளித்த மனு குறித்து கோவை எம்.பி. நடராஜன் கேள்வி..!!

கோவை: பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவையை பிரிக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடிதம் எழுதியது அறியாமையா? அல்லது அக்கறையின்மையா? என்று கோவை எம்.பி. நடராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்திருந்தார்.

அதை தமிழ்ப்படுத்தி அறிக்கையில் வெளியிட்டிருந்தார். ஆனால் கோவை ஏற்கனவே சேலம் கோட்டத்தில் தான் இருப்பதாக கூறி வானதி அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வானதி மனு தொடர்பாக கோவை எம்.பி. நடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பல்வேறு அமைப்புகள் போராட்டத்தால் 2006ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத், சேலம் கோட்டத்தை உருவாக்கியதாகவும், அதில் பாலக்காடு கோட்டத்தில் இருந்த கோவையை தனியாக பிரித்து அப்போது இணைந்ததாக கூறியுள்ளார்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போன்ற ஊர்கள் மட்டுமே தற்போது பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இருப்பதாகவும், அதனையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாக நடராஜன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
உண்மை நிலவரம் தெரியாமல் ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்திருப்பது அவரின் அறியாமையை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

பிரச்னை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும், இதுகுறித்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல் மனு அளித்திருப்பது கோவைக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது என்று கூறியுள்ளார். மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது, கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம் என்றும் நடராஜன் தன்னுடைய அறிக்கை வாயிலாக வானதியை கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Minister of Railways ,GP Natarajan , Vanathi Srinivasan, Ignorance, Coimbatore MP Natarajan
× RELATED பணி காலத்தில் மது அருந்திய விவகாரம்...