×

காங்கிரசை சீரழித்த உட்கட்சி பூசல்: பஞ்சாபில் சித்து பதவி தப்புமா?

ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும் சூறாவளியாக சுழன்றனர். குறிப்பாக, பெண்கள், இளைஞர்களை கவர்ந்தனர். இதனால், இத்தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என கருதப்பட்டது.

கோவா, மணிப்பூர். உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜ.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்படும், தொங்கு சட்டப்பேரவை உருவாகும் என கணிக்கப்பட்டன. நேற்றைய தேர்தல் முடிவுகளும் ஆரம்பத்தில் அப்படிதான் தொடங்கின. பிறகு தலைகீழாகி விட்டது. உத்தரகாண்டில் பாஜ வெற்றி பெற்றது.  கோவாவிலும்  கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அக்கட்சிக்கு தேசிய அளவில் புத்துணர்வு ஏற்படும். கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்பார் என கருதப்பட்டது.

ஆனால், 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த முறை ஆட்சி செய்து வந்த பஞ்சாபில் உட்கட்சி பூசலால் படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங்கின் பதவி வெறியே இதற்கு மூலக் காரணமாக கருதப்படுகிறது. முதலில் அவர் காங்கிரசில் பலம் வாய்ந்த முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கை குறிவைத்து வீழ்த்தினார். பதவியை துறந்த அமரீந்தர், தனிக் கட்சி தொடங்கி, பாஜ.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இதில், காங்கிரசின் ஓட்டுகள் பிரிக்கப்பட்டன.

அடுத்து, அமரீந்தர் சிங்குக்கு பதிலாக முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு எதிராகவும் செயல்பட்டார். இதனால், கட்சியில் கடும் உட்பூசல் ஏற்பட்டு, கோஷ்டிகள் அதிகமாகின. தேர்தல் நெருங்கிய நிலையில், முதல்வர் வேட்பாளரை தன்னை அறிவிக்கும்படி கட்சித் தலைமைக்கு அழுத்தம்  கொடுத்தார். இதனால், கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டு, கலகலத்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், இந்த தேர்தல் முடிவின் காரணமாக சித்துவின் மாநில தலைவர் பதவி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்கள் வழங்கிய தீர்ப்பை பணிவோடு ஏற்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மக்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது.  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தேர்தல் பணியில் கடினமாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கு நன்றி. இந்த தோல்வியின் மூலம் பாடம் கற்போம். நாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்,’ என கூறியுள்ளார்.

இப்போது தான் யுத்தம் ஆரம்பம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். எங்களின் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் தொண்டர்கள் புதிய ஆற்றலுடனும், தைரியத்துடனும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். மக்கள் நலனுக்கு பாடுபட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Congress ,Sidhu ,Punjab , Intra-party feud that ravaged Congress: Will Sidhu escape power in Punjab?
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்