கிருஷ்ணா கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் நீர் வழித்தடத்தில் பழங்கால அம்மன் சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் வட்டாசியர் ஏ.செந்தில்குமார் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணா கால்வாயில் சோதனையிட்டனர். அப்போது 2 அடி உயர அம்மன் கற்சிலை, 2 அடி உயரம் கொண்ட சிமென்டினால் ஆன பழங்கால அம்மன் சிலை மற்றும் சிங்கம் கற்சிலை ஆகிய 3 பழங்கால சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே 3 சிலைகளையும் மீட்டு போலீசார் உதவியுடன் திருவள்ளூர் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்து சீல் வைத்தனர். மேலும் இந்த சிலைகளின் பழமை தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக திருவள்ளுவர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் தெரிவித்தார். 

Related Stories: