நல்லூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை துவக்க விழா: எம்எல்ஏ சுதர்சனம் பங்கேற்பு

புழல்: செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமுருகன் நகரில் புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவிடம் பாலமுருகன் நகர் பொதுமக்கள் ரேஷன் கடை மற்றும் சிமென்ட் சாலை அமைக்குமாறு மனு அளித்து வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று, பாலமுருகன் நகர் 4வது தெருவில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதே பகுதியில் சிமென்ட் சாலையும் அமைக்கப்பட்டது. புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு, சிமென்ட் சாலை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சோழவரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன் தலைமையில் நடந்தது. நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவல்லி டில்லி, ஒன்றிய கவுன்சிலர் ரேவதி துரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் தொகுதி எம்எல்ஏவுமான மாதவரம் சுதர்சனம், புதிய ரேஷன் கடை கட்டிடம் மற்றும் சிமென்ட் சாலையை மக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

Related Stories: