×

சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்: மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டம் ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள  மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசினார்.
 தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதன் முறையாக மாவட்ட கலெக்டர், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த, கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அனைத்து துறை செயலாளர்கள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்று பேசினார்.

நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் நாள் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த புதிய அரசு அமைந்த பிறகு நடைபெறக்கூடிய முதலாவது மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மாநாடு, இந்த மாநாடு. எனவே, உங்கள் அனைவரையும் ஒருசேர இந்த மாநாட்டின் மூலமாக சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு கொரோனா அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறோம்.  வரலாறு காணாத கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டபோது, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தை சார்ந்தவர்களும் இரவு பகல் பாராது பணியாற்றியிருக்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம்  பாராட்டுகளை மனதாரத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சவால்கள் ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் மாபெரும் பல சாதனைகளையும் நாம் செய்திருக்கிறோம். நேர்மையான, வெளிப்படையான, மக்கள் விரும்புகின்ற அரசு நிர்வாகத்தை நாம் அனைவரும் இணைந்து அளித்து வருகிறோம். நீங்களும் இந்த பணியிலே பங்குதாரர்களாக இருந்திருக்கிறீர்கள் என்ற முறையில், என்னுடைய பாராட்டுக்களை மீண்டும் மீண்டும்  தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

‘ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள்’ என்று ஏழு தொலைநோக்கு குறிக்கோள்களை அறிவித்தோம். கொள்கை அரசையும் மக்கள் நல சேவை அரசையும் ஒருசேர நடத்த வேண்டுமென்ற இலட்சியத்தை வகுத்தோம். இப்படி, இந்த ‘திராவிட மாடல்’ அரசின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிர்வாக சக்கரத்தை சரியான திசையில், மக்கள் பயனடைக்கூடிய திசையிலே திருப்பினோம்.

இந்தியாவுக்கே முன்னோடி திட்டங்களாக விளங்கக்கூடிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘இன்னுயிர் காப்போம்  நம்மை காக்கும் 48’ இப்படி மக்கள் நலனுக்காக நாம் தீட்டியுள்ள அனைத்து திட்டங்களும் கடைகோடியில் வாழக்கூடிய மனிதரையும் சென்றடைய தேவையான நடவடிக்கைகளை இந்த 10 மாதங்களில் எடுத்து தமிழ்நாட்டின் நிர்வாகத்தை இந்திய அளவிலே தலைநிமிர செய்திருக்கிறோம். மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் முதன்முறையாக மாவட்ட வன அதிகாரிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது.  இதனுடைய முக்கிய நோக்கம்,   தமிழ்நாட்டை பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவொரு மிக முக்கியமான முன்னெடுப்பு. தற்போது நமது தமிழ்நாட்டில் 24 சதவீதமாக இருக்கும் மொத்த பசுமை பரப்பினை குறைந்தபட்சம் 33 சதவீதமாக 10 ஆண்டுக்குள் உயர்த்திட வேண்டும்.

புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம்-ஒழுங்கு மிக மிக முக்கியமாகும். தமிழ்நாட்டில் எப்போதும் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு விஷயத்திலே நான் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். அதை நீங்கள் அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது.  மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவுவதை உறுதிசெய்திடக்கூடிய வகையில் சாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. நாசகார சக்திகள் எந்த வடிவிலும் தலைதூக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது.  

எல்லோரும் ஓரினம்  எல்லோரும் ஓர் குலம் என்ற சமத்துவ சமூகமே நமது அரசினுடைய குறிக்கோள். கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, மோசடி, நில அபகரிப்பு போன்ற பொதுமக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை எந்தவித பாரபட்சமும் காட்டக்கூடாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் அமைதியில்தான் அனைத்தும் அடங்கி இருக்கிறது.  சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. அவற்றை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும் மாநாட்டில் அதிகாரிகள் கூறியதை கவனமுடன் கேட்டுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி அளித்தார்.

குறைகளை காது கொடுத்து கேளுங்கள்: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறையிலே, தங்களது குறைகளை, மனுக்களாக கொடுத்துள்ள மக்களின் குரல் காது  கொடுத்து கேட்கப்பட வேண்டும். சிற்றூர் அளவில் செய்து முடிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் செய்யாமல்  இருப்பதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் தீர்வினை எதிர்பார்த்து தலைமை செயலகத்திற்கு மனுக்களை அனுப்பி கொண்டிருக்கிறார்கள் .

மாணவர்களுக்கு வழிகாட்டுங்கள்: கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘எனது கனவு திட்டமாக இருக்கக்கூடிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி வைத்துள்ளேன். மாணவர்கள், இளைஞர்கள் ஆகிய அனைவருக்கும் மாவட்டத்தின் தலைமை வழிகாட்டியாக நீங்கள் திகழ வேண்டும். தமிழ்நாடும் ‘நம்பர்1’ என்ற நிலையை அடையும். எனது கனவு திட்டத்தை உங்களை நம்பி நான் ஒப்படைக்கிறேன் என்றார்.

Tags : District Collectors, Police Officers Conference ,Md. KKA Stalin , I will not compromise on law and order: Chief Minister MK Stalin speaks at a conference of district collectors and police officers
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...