×

களக்காடு பகுதியில் நெல் அறுவடை தீவிரம்: போதிய விலையின்றி விவசாயிகள் கவலை

களக்காடு: களக்காடு பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்  நெல்லுக்கு போதிய விலை கிடைக்காததல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள களக்காடு மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும். குறிப்பாக இங்கு வாழ்வோரில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். களக்காடு, சிதம்பரபுரம், மாவடி, மலையடிபுதூர், பத்மநேரி, இடையன்குளம், டோனாவூர் மற்றும் திருக்குறுங்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள விளைநிலங்களில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் நெல் நடவு மேற்கொண்டனர்.

டீலக்ஸ் பொன்னி, அம்பை-16, டி.கே.-13, ஆடுதுறை-45, டி.பி.எஸ்-5 ரகங்களை சேர்ந்த நெற் ரகங்களை பயிரிட்டனர். தற்போது நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு நெல் மகசூல் குறைந்துள்ளதோடு அதற்கு போதிய விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  தனியார் வியாபாரிகளிடம் 150 கிலோ பெரிய ரக நெல்  ரூ.2,100க்கும், சிறிய ரகம் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் 100 கிலோ பெரிய ரக நெல் ரூ 2,070க்கும், சிறிய ரக நெல் 2,100க்கும் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் அரசின் ஊக்கத் தொகையும் கிடைக்கிறது. இருப்பினும் இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பெருமளவில் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.  நெல் அறுவடை செய்ய இயந்திரத்திற்கு வாடகைக்காக 1 மணி நேரத்திற்கு 1,800 ரூபாயில் இருந்து ரூ.2,800 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. மேலும் இடு பொருட்கள் செலவுகளை காட்டிலும் குறைவான தொகையை கிடைக்கிறது. அத்துடன் இந்தாண்டு கொட்டி தீர்த்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் வயல்களில் தேங்கிநின்றதால் பயிர்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு மகசூல் குறைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் கூறுகையில் ‘‘அரசின் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகளை ஆன் லைனில் பதிவு செய்யும் படி கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் இண்டர்நெட் மையங்களுக்கும், கொள்முதல் நிலையங்களுக்கும் அலைய வேண்டியதுள்ளது. இதில் பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. எனவே கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படியே கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.

 இதேபோல் வனவிலங்குகள் அட்டகாசமும் அதிக அளவில் இருப்பதால் விவசாயத்தில் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி பால்சன் கூறுகையில் ‘‘மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் குரங்குகள், கடமான்கள், காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பன்றிகள் வாழைகளையும் நெற்பயிர்களையும் துவம்சம் செய்கின்றன. பன்றிகளின் பெருக்கமும் அதிகரித்து விட்டன. பகல் நேரங்களில் கூட பன்றிகள் விளைநிலங்களில் சுற்றித்திரிகின்றன’’ என்றார்.

களக்காடு பகுதியைப் பொருத்த வரை வங்கிகளில் கடன் வாங்கியும், தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றும் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளனர். விவசாய சாகுபடிக்கு செலவழித்த தொகைக்குக்கூட விலை கிடைக்காததால் வேதனையில் உள்ளனர். எனவே, அரசு இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி 100 கிலோ நெல்லின் விலையை ரூ.2,500 ஆக உயர்த்தித்தர வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Kalakadu , Jungle, paddy harvest, intensity, farmers, concern
× RELATED களக்காடு அருகே குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு