×

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்தின் முடிவை ஆதரிக்க அமெரிக்கா மறுப்பு!: நேட்டோ மீது மோதல் போக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கை..!!

வாஷிங்டன்: ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட உக்ரைன் அரசுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்தின் முடிவுக்கு ஆதரவு அளிக்க மறுத்திருக்கும் அமெரிக்கா, இம்முயற்சி பேராபத்தை விளைவிக்கும் என தெரிவித்திருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் அதி தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போரிட நவீன போர் விமானங்களின் தேவை ஏற்பட்டிருப்பதாக அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்க்சி உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து உதவ முன்வந்தது.

ஜெர்மனியில் உள்ள ரம்ஸ்டி நேட்டோ விமானப்படை தலத்தில் இருந்து ரஷ்ய தயாரிப்பான மிக் 29 வகை போர் விமானங்களை உக்ரைன் அரசுக்கு வழங்க தயார் என்று போலந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் போர் விமானங்களை அனுப்பும் போலந்து அரசின் முடிவினை ஆதரிக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பேராபத்தை ஏற்படுத்தும் என்று கோரியுள்ள பென்டகன், நேட்டோ அமைப்புடன் ரஷ்யாவின் மோதல் போக்கு மேலும் தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

போலந்தின் அழைப்பை அமெரிக்கா நிராகரித்துவிட்டதால் நேட்டோ உறுப்பு நாடான போலாந்திற்கும் - அமெரிக்காவிற்கும் இடையேயான உறவில் சிறு விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் தொடர்பான சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், இது தொடர்பாக பேச அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போலந்து சென்றுள்ளார். இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சகி, ரசாயன ஆயுதம் அல்லது உயிரி ஆயுதங்களை கொண்டு ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்திருக்கிறது.

பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசியதாவது: போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்புவது குறித்து போலந்து தேசிய பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு பற்றி அமெரிக்கா தரப்பில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. உக்ரைனுக்கு உதவ போலந்து தொடர்ந்து முயன்று வருவதற்கு அமெரிக்கா நன்றி கூறுகிறது. அதேநேரத்தில் உக்ரைன் விமானப்படைக்கு கூடுதல் போர் விமானங்களை வழங்கும் போலந்தின் முடிவு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.

Tags : US ,Poland ,Ukraine ,NATO , Ukraine, warplane, Poland, USA
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...