×

திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு முதலாம் மண்டலத்தில் 4-வது சுற்றுக்கு தண்ணீர் கிடைக்குமா?

உடுமலை,: திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிந்துள்ளதால், முதலாம் மண்டலத்தில் நான்காம் சுற்றுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் உடுமலை நகரம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது.திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.பாசனத்துக்கு நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 5 சுற்றுகள் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.3-வது சுற்று தண்ணீர் திறப்பு இன்றுடன் (10-ம் தேதி) நிறைவடைகிறது.

அடுத்து 4-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் அணையில் நீர்மட்டம் வெறும் 30.71 அடிதான் உள்ளது. டிசம்பரில் தண்ணீர் திறக்கும்போது 57 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போதுள்ள நீர்மட்டம் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது. இன்னும் 15 அடிக்கு நீரை சேமித்தால் மட்டுமே அடுத்த சுற்று தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.எனவே, பரம்பிக்குளம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து, திட்டமிட்டபடி 4-வது சுற்றுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைக்கு நேற்று 736 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. 422 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.



Tags : Thirumurthy Dam , Thirumurthy Dam water level decline Will water be available for the 4th round in the first zone?
× RELATED பெரியகுளம் செக்டேம் அருகே தரைப்பகுதி சேதமடையும் அபாயம்