×

ஆஸி-யில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!: மீட்புப்பணிகள் தாமதத்தால் பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷம்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகள் மந்தமாக நடைபெற்றதால் அவற்றை பார்வையிட வந்த பிரதமரை கண்டித்து மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பருவ நிலை மாற்றத்தின் காரணமாக ஆஸ்திரேலியாவில் அடிக்கடி காட்டுத்தீ, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள குயீன்ஸ்லாந்து மற்றும் நியூ சவூத் வேல்ஸ் மகாணங்களில் ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சிட்னி உள்பட முக்கிய நகரங்களில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுமார் ஐந்து லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் இணைய சேவைகள் இன்றி தவித்து வரும் மக்கள், மீட்பு பணிகள் மந்தமாக நடைபெற்றதால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் ஆஸி பிரதமருக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

Tags : Aussie , Aussie, heavy rain, flood, rescue, PM
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...