×

திருமுல்லைவாயல் அரபாத் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படும்: அமைச்சர் ஆவடி நாசர் தகவல்

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அரபாத் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தி, மின்விளக்குகளுடன் கூடிய நடைப்பாதை அமைக்கப்படும் என அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அரபாத் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி மணிகண்டபுரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு, இந்த ஏரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், இந்த ஏரியை பராமரிக்காமல் பொதுப்பணித்துறை நிர்வாகம் கைவிட்டது.  இதனால் ஏரியில் சமூக விரோதிகள் குப்பை கழிவுகள் கொட்டி வந்தனர். மேலும், ஏரியில் கழிவு நீரும் விடப்பட்டு மாசடைந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது அரபாத் ஏரி கழிவுநீர் குட்டை போல் காட்சி அளிக்கிறது.

இதற்கிடையில், தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசரிடம் ஏரியை ஆழப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ஆவடி நாசர், மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அரபாத் ஏரியை நேற்று ஆய்வு செய்தார். மேலும், அவர் அண்ணனூர் ரயில்வே மேம்பாலத்தை சுற்றியுள்ள அம்பத்தூர் ஏரி உள்வாயில் பகுதியையும் பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அரபாத் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாராமல் மாசடைந்துள்ளது. இதனை தூர்வாரி ஆழப்படுத்தவும், நீர்மாசடைவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதோடு மட்டுமல்லாமல், ஏரிக்கரையை பலப்படுத்தி மின்விளக்குகளுடன் நடைப்பாதை அமைக்கப்படும். இதற்கு தேவையான நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,  அண்ணனூர் ரயில்வே மேம்பாலத்தை சுற்றி காலியாக உள்ள 4 ஏக்கர் ஏரி உள்வாயில் பகுதியை சீரமைத்து குளம் அமைக்க ஆவண செய்யப்படும் என்றார்.

ஆய்வின்போது ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் சத்தியசீலன், மாநகர திமுக செயலாளர்கள் பேபிசேகர்,  ஜி.நாராயணபிரசாத், கவுன்சிலர்கள் ஆசிம்ராஜா, அமுதாசேகர், வெங்கடேசன், செல்வம், சுதாகரன், சக்திவேல்,  ஜெயப்பிரியா சரவணன், பெருமாள், விமல், ஜான், வட்டச்செயலாளர்கள் கோபால், முல்லைராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Thirumullaivayal Arafat Lake ,Minister ,Avadi Nasser , Thirumullaivayal Arafat Lake will be deepened by dredging: Minister Avadi Nasser Information
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...