சேலம்: சேலத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று அளித்த பேட்டி: உலகளவில் மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த முதல்வராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்கிறார். தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறார். மீதியிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவார்.
மேகதாது அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் நூறு சதவீதம் எதிர்க்கிறது. இந்த பிரச்னையில் முழுக்க,முழுக்க நாங்கள் முதல்வரை பின்பற்றுவோம். உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் குழப்பங்கள் இருந்தது. அதை மிகச்சிறந்த ஒரு அறிக்கையின் மூலமாக முதல்வர் சரி செய்துள்ளார். இது கூட்டணி தர்மத்தில் மிகப்பெரிய அம்சமாக இருக்கிறது. விரைவில் வர இருக்கும் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நூற்றுக்கு நூறு நம்பலாம்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் உள்ளத்தில் எந்தவிதமான கள்ளம், கபடமும் இல்லை என்று சொன்னால், எப்படி அவர் இறந்தார் என்பதை வெளிப்படையாக வந்து சொல்ல வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் ஒன்பது முறை சம்மன் அனுப்பியும், அவர் வராதது ஏன் என்று தெரியவில்லை. அவருக்கு குற்ற உணர்ச்சி இருக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது? ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பதை முதல்வராக பொறுப்பு வகித்த பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக ஆறுமுகசாமி கமிஷனிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.