யூஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளை பயன்படுத்தி தேசிய கல்வி கொள்கை குறுக்கு வழியில் அமலாக்கப்பட்டு வருகிறது: அகில இந்திய கல்வி பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

சென்னை: தேசிய கல்வி கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நீட் தாக்கம் குறித்து தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் உறுப்பினர் மற்றும் அகில இந்திய கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் அகில இந்திய தலைமைக் குழு உறுப்பினர் ஜவகர் நேசன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கையில் ஏராளமான சர்ச்சைக்குரிய அம்சங்கள் உள்ளன. இவை பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சிக் கல்வியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்த உள்ளன. கடும் எதிர்ப்புக்குப் பின்பும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு ஈடுபட்டுவருகிறது. அதற்கு யூஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு குறுக்கு வழியில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. நாடு முழுவதும் தன்னிச்சையாக மக்கள் மீது திணிக்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து மக்கள் போராட முன் வர வேண்டும். குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஒரு ஒன்றுபட்ட இயக்கத்தை கட்ட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: