×

ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஜன்னல் பிரிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில், செயின்ட்-கோபைன்நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் செயின்ட்-கோபைன் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

கலைஞர் 1998ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொழில் வளாகத்தில் செயின்ட்-கோபைன் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி,  செப்டம்பர் 2000ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூரில் 177 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிறுவனம், 3,750 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இவ்வளாகம்,  இந்த நிறுவனத்தால் அதிகபட்ச முதலீடு மேற்கொள்ளப்பட்ட ஆலையாக திகழ்கிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனம் சுமார் ரூ.4,700 கோடி முதலீட்டினை செய்து, நேரடியாக 2000 பேருக்கும், மறைமுகமாக 2500 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.  

இந்த வளாகத்தில் கண்ணாடி, டின்டட் கண்ணாடி, முகம் பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, லாக்வெர்டு கண்ணாடி, இன்சுலேட்டட் உறுதியான கண்ணாடி, மேற்பூச்சு உள்ள கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, தீப்பிடிக்காத, குண்டு துளைக்காத, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட 90 சதவீத கண்ணாடிகள் இந்த வளாகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள, மிதவை கண்ணாடி பிரிவு அதிகபட்ச உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், பிரத்யேகமான வடிவமைப்பு 4.0 ஆகிய சிறப்பு தன்மைகளை உள்ளடக்கியது.

நவீன கட்டமைப்புகளுக்கேற்ற கண்ணாடிகள், ஆட்டோமொபைல் துறைக்கேற்ற கண்ணாடிகள் மற்றும் சூரிய மின்உற்பத்திக்கான கண்ணாடிகளை தயாரிக்கிறது. ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவானது முழுவதும் டிஜிட்டல் மற்றும் தானியங்கி முறையில் செயல்படும். 10,000 சதுரமீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 1 லட்சம் ஜன்னல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் சிறந்த புத்தாக்க, ஆராய்ச்சி மற்றும் சோதனைக்குட்படுத்தப்பட்ட யுபிவிசி ஜன்னல் சார்ந்த பொருட்கள், குறிப்பாக எதிரொலி கேட்காத, சூரிய மற்றும் வெப்பம் கடத்தாத மற்றும் பாதுகாப்பானவையாக தயாரிக்கப்படுகிறது.  அடுத்து, செயின்ட் கோபைன்-சிப்காட் நகர்ப்புற வனம் சுமார் 3 லட்சம் சதுரடி பரப்பளவில் ஏறக்குறைய 60,000 மரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இது தமிழ்நாடு அரசின் பசுமை இலக்கை எட்டுவதற்கும், மாநிலத்தின் பசுமை பகுதி அளவை 33 சதவீதம் உயர்த்தவும் உதவுகிறது.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர். பாலு எம்பி, செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தொழில் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, செயின்ட் கோபைன்  நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின், செயின்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், செயின்ட் கோபைன் ஆசிய - பசிபிக் தலைமை செயல் அலுவலருமான  பி.சந்தானம், பிரான்ஸ் நாட்டு தூதர் லிசி டாபு, செயின்ட் கோபைன்  இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள்  எஸ்.என்.ஐசனோவர், ஏ.ஆர்.உன்னி கிருஷ்ணன், பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூரில் 177 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிறுவனம், 3,750 கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீடு செய்துள்ளது.

Tags : St.-Cobine ,Sriperumbudur ,Chief Minister ,MK Stalin , Floating glass section, window section installed at St.-Cobine premises in Sriperumbudur at an estimated cost of Rs.500 crore: Launched by Chief Minister MK Stalin
× RELATED 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை...