×

அம்மா உணவகங்களுக்கு மளிகை விநியோகம் ரூ.35 கோடி நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும்: கூட்டுறவு துறை அமைச்சரிடம் தொமுச கோரிக்கை

சென்னை: டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து அளித்த மனு: சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை (டியுசிஎஸ்) மூலமாக சென்னை மாநகராட்சி சார்பாக செயல்பட்டு வரும் சுமார் 413 அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் காய்கறிகள், மளிகை பொருட்கள், எரிவாயு உருளைகள் விநியோகம் செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை விநியோகம் செய்த வகையில் ரூ.35 கோடி நிலுவை தொகையாக இருந்து வருகிறது.

இதில் காய்கறி வழங்கும் வியாபாரிகளுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறையும், எரிவாயு வழங்கும் ஐஓசி நிறுவனத்திற்கு முன் தொகையாக காசோலை வழங்கிய பின்தான் எரிவாயு உருளைகள் அனுப்பப்படுகிறது. மளிகை பொருட்கள் வழங்கும் வியாபாரிகளுக்கு 45 நாள் கடன் கணக்கில் கொள்முதல் தொகை வழங்கிட வேண்டும். ஆனால், மாதம் ரூ.5 கோடி அளவிலான பொருட்கள் டியுசிஎஸ் நிறுவனத்தால் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சி வெறும் ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையான தொகைதான் இரு மாதத்திற்கு ஒருமுறை வழங்கி வருகின்றனர்.

இதனால் டியுசிஎஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதிலும், வியாபாரிகளுக்கு கொள்முதல் பொருளுக்கு தரவேண்டிய தொகை பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட, சென்னை மாநகராட்சியின் நிலுகை தொகை ரூ.35 கோடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாதம் மாதம் பொருட்கள் வழங்கும் தொகையான ரூ.5 கோடி தொகையில் எந்த நிலுவையும் இல்லாமல், டியுசிஎஸ் நிறுவனத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Amma ,Tomusa ,Minister of Co-operatives , Rs 35 crore outstanding for grocery distribution to Amma restaurants
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...