×

லாரி டிரைவரை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது 2 ரவுடிகளின் கால்முறிவு: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சேலம்: சேலத்தில் லாரி டிரைவரை கடத்தி சென்று பணம் பறித்த வழக்கில் பிடிபட்ட ரவுடிகள் 2 பேர் தவறி விழுந்ததில் கால்முறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன்(40). லாரி டிரைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அவரது வீட்டிற்குள் பிரபல ரவுடி சித்தேஸ்வரன், கூட்டாளிகள் 4 பேருடன் உள்ளே புகுந்தார். அங்கிருந்த அன்பழகனை கத்திமுனையில் அடித்து, அங்கிருந்த ₹36 ஆயிரத்தை கொள்ளையடித்ததுடன், அன்பழகனை காரில் கடத்தி சென்றார். கன்னங்குறிச்சி மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று கட்டிவைத்து அடித்துள்ளனர்.

மேலும் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு, உடனடியாக ₹1லட்சம் கொண்டு வந்து  தம்பியை மீட்டு செல்லவேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி 4 பவுன் நகை, ₹5ஆயிரத்தை கொடுத்து தம்பியை மீட்டு சென்றார். இதுகுறித்து வெளியே சொன்னால் சிறைக்கு சென்று திரும்பியவுடன் கொன்றுவிடுவேன் என ரவுடி சித்தேஸ்வரன் மிரட்டியுள்ளார். ரவுடிகள் தாக்குதலில் காயம் அடைந்த அன்பழகன் தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தார். அப்போது தவறி கீழே விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் கத்தியால் குத்திய காயம் இருந்ததால் இதுகுறித்து கருப்பூர் போலீசாருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவித்தனர். இதன்பிறகே ரவுடி சித்தேஸ்வரன் தலைமையிலான கும்பல் கடத்தி சென்று பணம் பறித்த தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கருப்பூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் , கடத்தல் கும்பலை தேடி வந்தார். இந்நிலையில் ரவுடி சித்தேஸ்வரன்(39), அழகாபுரத்தை சேர்ந்த ரவுடி அப்பு(எ) அரவிந்த்(31) ஆகியோரை பிடித்தனர். சித்தேஸ்வரன் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இவர் 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பு மீது வீடு புகுந்து கொள்ளையடித்தல், அழகு நிலையத்திற்குள் சென்று பணம் பறித்தல் உள்பட 4 வழக்குகள் இருக்கிறது.

இவர்கள் இருவரையும், சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று கொள்ளையடித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். பின்னர் கடத்தி செல்லப்பட்ட கன்னங்குறிச்சி மலையடிவாரப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது இருவரும் அங்கிருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் சேலம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Larry ,Salem Government Hospital , Truck driver, kidnapper, money, arrest
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி