×

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா: 2 கிலோ வரை மீன்களை அள்ளிய இளைஞர்கள்

மேலூர்: மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா இன்று காலை நடந்தது. இதில் பலருக்கும் குறைந்தது 2 கிலோ வரை மீன்கள் சிக்கின. கிடைத்ததில் சமைத்தும், உறவுகளுக்கு பரிமாறியும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது சருகுவலையபட்டி. இங்குள்ள கம்புலியான் கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சருகுவலையபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடக்கு வலையபட்டி, தனியாமங்கலம், கீழவளவு, கீழையூர், மேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பொதுமக்கள் இங்கு திரண்டனர். முன்னதாக மீன்பிடி திருவிழா குறித்து அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இன்று அதிகாலையிலேயே கண்மாயை சுற்றி ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கிராமத்து முக்கியஸ்தர்கள் துண்டு வீசி, மீன்பிடி திருவிழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். மக்கள் அனைவரும் ஒரு சேர கண்மாய்க்குள் இறங்கி, தாங்கள் வைத்திருந்த வலை, கச்சா, கூடை, சேலை, வேட்டி என அனைத்தையும் பயன்படுத்தி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர், நாட்டு வகை மீன்களான கெழுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் பிடிபட்டன, பலருக்கும் 2 கிலோ வரையிலும் மீன்கள் கிடைத்தது.

 இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘‘பிடிபட்ட மீன்களை கடவுளுக்கு படைத்து, வீட்டில் சமைத்து உண்பதோடு, உறவினர்களுக்கும் பரிமாறுகிறோம். ஒருபோதும் இந்த மீன்களை விற்பனை செய்யமாட்டோம். இப்படி மீன்பிடி திருவிழா நடத்தி, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதனால் அடுத்தடுத்த ஆண்டுகள் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பொய்க்காமல் ஆண்டுதோறும் தொடர்கிறது’’ என்றனர்.

Tags : Melur , Melur, Fishing Festival, Fish, Youth
× RELATED மேலூர் அருகே கோடை வெயிலில் தவிக்கும்...