×

ரூ.250, ரூ.20 கட்டண தரிசனம் ரத்து திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டணம் பொது தரிசனம் இன்று முதல் அமல்: 60 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக நியமனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.250 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் ரூ.20 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.100 கட்டணத்திலும், பொதுப் பாதை வழியாகவும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் பாதுகாப்பு பணியில் முதற்கட்டமாக ஆயுதப்படை போலீசார் 60 பேர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர். உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும் ரூ.100, ரூ.20 கட்டண தரிசனம், பொது தரிசனம் என 4 வரிசைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் ரூ.250 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு பக்தர்கள் சிரமத்தை அனுபவித்தனர். இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பக்தர்கள் தரிசனத்தில் மாற்றங்களை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரூ.250, ரூ.20 ஆகிய கட்டண தரிசன முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டது. ரூ.100 கட்டணம் மற்றும் பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்த இரு தரிசன முறையிலும் பக்தர்கள் அனைவரும் மகா மண்டபத்தில் ஒரே வழியில் சமமாக சென்று மூலவரை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இரு வரிசையில் வந்த பக்தர்கள் எந்த பாகுபாடும் இன்றி மூலவரை தரிசித்தனர். ஏற்கனவே கோயில் பாதுகாப்பு பணியில் 125 ஆயுதப்படை போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவும் இன்று முதல் அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக 60 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நடைமுறை இன்று முதல் 15 நாட்கள் சோதனை அடிப்படையில் அமலில் இருக்கும் என்று கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை தெரிவித்தார். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று வேலை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் சுமாராகவே இருந்தது.

Tags : Tiruchendur Temple ,Amal , Rs.250, Rs.20 fee, Darshan, cancellation, Thiruchendur temple
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...