பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை மார்ச் 17க்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்..!!

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ்தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பாலியல் புகார் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. வழக்கு விசாரணையை முடித்து கடந்தாண்டு ஜீலை மாதம் 29ம் தேதி 1000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மட்டுமே நேரில் ஆஜராகியிருந்தார். முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.இடமும், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பிடமும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: