×

பல்லடம் அருகே விபத்து 2 பைக் மீது சரக்கு ஆட்டோ மோதி 4 வயது சிறுமி உள்பட 4 பேர் பலி

திருப்பூர் : பல்லடம் அருகே 2 பைக்குகள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 4 வயது சிறுமி உள்பட 4 பேர் பலியாகினர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புத்தரச்சல் பகுதியில் நேற்று காலை 4 மணிக்கு 2 பைக்குகளில் 2 தம்பதிகள் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஒரு பைக்கில் 2 பேரும், மற்றொரு பைக்கில் ஒரு சிறுமி உள்பட 3 பேரும் இருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ 2 பைக்குகள் மீதும் நேருக்கு நேர் மோதிய பின்னர் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பைக்குகளில் சென்ற சிறுமி உள்பட 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெண் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து இது குறித்து 108 ஆம்புலன்சுகளுக்கும், காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பைக்கில் சென்றது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (30), இவரது மனைவி ஆனந்தி (27) என்பதும், இவர்கள் சூலூரில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மற்றொரு பைக்கில் சென்றது பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற பிரம்மநாயகம் (50), இவரது மனைவி முத்துமாரி (40), மகள் மகாகவி (4) என்பதும் தெரியவந்தது. தாராபுரம் நோக்கி சென்றபோது இவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ஆனந்தி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய சரக்கு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் நடந்த கோர விபத்தில் சிறுமி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Palladam , Tiruppur: Four people, including a 4-year-old girl, were killed when a truck collided head-on with two bikes near Palladam in Tiruppur district.
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு