×

குடியாத்தம் மகளிர் தின விழாவில் நெகிழ்ச்சி பெண் குழந்தை பிறந்ததால் அழுத எனக்கு இப்போது மகள்கள் தாயாக இருக்கிறார்கள்-கண்ணீர்விட்டு அழுத பெண் எம்எல்ஏ

குடியாத்தம் : பெண் குழந்தை பிறந்ததால் அழுத எனக்கு இப்போது மகள்கள் தாயாக இருக்கிறார்கள் என்று குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் பெண் எம்எல்ஏ கண்ணீர்விட்டு அழுதபடி கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாறன்பாபு தலைமை தாங்கினார்.

டாக்டர் அருளரசி வரவேற்றார். டாக்டர் ஹேமலதா முன்னிலை வகித்தார். குடியாத்தம் நகராட்சி தலைவர் சவுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக சுய பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்டவை செய்யப்பட்டது. மேலும் பெண்கள் சுகாதாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், பயிற்சி டிஎஸ்பி சுவாதி, திருவள்ளுவர் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ அமலுவிஜயன் பேசுகையில், ‘எனக்கு திருமணமாகி முதல் பெண் குழந்தை பிறந்தவுடன், ஒரு பெண்ணாக பிறந்து நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன். எனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதே என அழுதேன். சில நாட்களுக்கு முன்பு எனது தாய் இறந்துவிட்ட நிலையில், எனது மகள்கள் தான் என்னை தாய் போல் கவனித்து கொள்கின்றனர். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று மேடையில் கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டே பேசினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.



Tags : Gudiyatham ,Women's Day , Gudiyatham: The world held at Gudiyatham Government Hospital that I am now a mother of daughters to cry over the birth of a baby girl
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...