×

கார்கிவ்- லிவிங் சென்றபோது பயமாக இருந்தது வெடி சத்தம் கேட்டால் விளக்குகளை அணைத்து ரயிலை நிறுத்திவிடுவார்கள்-உக்ரைனில் இருந்து திரும்பிய ஆற்காடு மாணவர் தகவல்

ஆற்காடு : கடந்த மாதம் 24ம் தேதி முதல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் தங்கி மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு புதுத்தெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் அருணாசலம்(20) என்ற மருத்துவ மாணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வந்தார்.
தற்போது அந்த நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக நேற்று முன்தினம் இரவு அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் அருணாசலம் சென்னை வந்தார். அங்கிருந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை ஆற்காடு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் மாணவர் அருணாசலம் கூறியதாவது:உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக இந்திய மாணவர்கள் பலர் கார்கிவ் நகரிலிருந்து லிவிங் பகுதிக்கு ரயில் மூலம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானம் மூலம் எங்களை இந்தியா அழைத்து வந்தனர். கார்கிவ்  நகரில் இருந்து ரயிலில் வரும்போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
பல நேரங்களில் வெடிச் சத்தம் கேட்கும் போது விளக்குகளை அணைத்து ரயிலை நிறுத்தி விடுவார்கள்.

வெடி சத்தம் கேட்கும்போது மிகவும் பயமாக இருக்கும். இதனால் ரயிலில் வரும் பயணிகள் பீதி அடையாமல் இருக்க பாடல்களை ஒலிக்கச் செய்தனர். மற்ற நாட்டவர்கள் விட இந்திய அரசு நமது நாட்டு மாணவர்களை அழைத்து வருவதற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்தது.  

அதேபோல் தமிழக அரசும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எங்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு சென்று படிப்போமா என்று தெரியவில்லை. எங்களது மருத்துவக்கல்வி கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் நாங்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kharkiv ,- Living ,Arcot ,Ukraine , Arcot: The war between Russia and Ukraine has been going on since the 24th of last month. Thus staying in that country and studying medicine
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்